பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு: அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு: அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Author: Christon mano தமிழ்நாடு

கோவை பெரியார் அறிவுலகம் உட்பட முக்கிய அரசு நூலகங்களுக்குப் போலிப் புத்தகங்களை விநியோகம் செய்த முறைகேடு வழக்கில், 'அகல் விளக்கு' பதிப்பக உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குத் தரமற்ற மற்றும் போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும், தொடர்புடைய பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதன் முக்கிய கட்டமாக, போலி நூல்களை விநியோகித்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடம் இருந்து 1,857 போலிப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கந்தசாமி என்ற தனிநபர் அளித்த புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) பல்வேறு முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகக் கொள்முதலில், சாட் ஜிபிடி (ChatGPT) மற்றும் கூகுள் தகவல்களை அப்படியே காப்பி-பேஸ்ட் செய்து போலிப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, அகல் விளக்கு பதிப்பகம் வாயிலாக மட்டும் 2,339 புத்தகங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதற்கான பணப்பட்டுவாடாவும் நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டில் அகல் விளக்கு மோகன் மட்டுமின்றி, பொது நூலகத் துறை அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் தொடர்பு குறித்தும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.