தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி 2 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்வான் புயல்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5:30 மணி அளவில் 'அக்வான்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.
மிதமான மழை
இந்த நிலையில், இன்று (நவ.17) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை (நவ.18): சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கனமழை எச்சரிக்கை
மேலும், வரும் 19 ஆம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









