உலக அதிசயமாகுமா தமிழன் பெருமை தஞ்சை பெரிய கோவில்? நாடாளுமன்றக் குழு முக்கிய அறிவிப்பு!

உலக அதிசயமாகுமா தமிழன் பெருமை தஞ்சை பெரிய கோவில்? நாடாளுமன்றக் குழு முக்கிய அறிவிப்பு!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர்களின் கட்டிடக்கலைப் பெருமைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா? தஞ்சை பெரிய கோவில் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Author: Santhosh V தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு உலக அதிசயம் என்ற அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலை உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்ய உள்ளதாக அதன் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

பெரிய கோவிலில் நாடாளுமன்றக் குழு ஆய்வு!

மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் தஞ்சாவூருக்கு வருகை தந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய கோவிலை நேரில் பார்வையிட்டனர். அப்போது கோவிலின் பிரம்மாண்டமான கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பங்கள், சோழர் கால ஓவியங்கள் மற்றும் பழங்கால கல்வெட்டுகளைப் பார்வையிட்டு அதன் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொண்டனர்.

தாஜ்மஹாலை விட பிரம்மாண்டம்!

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் குமார் ஜா, தஞ்சை பெரிய கோவில் இந்தியாவின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று என்று புகழாரம் சூட்டினார். மேலும், தாஜ்மஹாலை விட பெரிய கோவில் பிரம்மாண்டமாகவும் தனித்துவமான கட்டிடக்கலைச் சிறப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பிரம்மாண்டமான கட்டுமானத்தை உருவாக்கியிருப்பது வியப்பளிப்பதாகக் கூறிய அவர், பெரிய கோவிலை உலக அதிசயமாக அங்கீகரிக்கச் செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு நிச்சயம் பரிந்துரை செய்யும் என்றும் தெரிவித்தார்.

மாதந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்!

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோவிலைக் காண ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவதாகக் குழுவினர் தெரிவித்தனர். குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக இருப்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாகவும் சஞ்சய் குமார் ஜா சுட்டிக்காட்டினார்.

கல்லணை, ஸ்ரீரங்கம் கோவிலிலும் ஆய்வு!

தஞ்சை பெரிய கோவிலைத் தொடர்ந்து, கரிகால சோழனால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையையும் நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டனர். அதன் கட்டுமான அமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சென்ற குழுவினர், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட கட்டிடக்கலைச் சிறப்புகளையும் ஆய்வு செய்தனர்.

நனவாகுமா தமிழர்களின் கனவு?

ஏற்கனவே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தஞ்சை பெரிய கோவிலுக்கு, உலக அதிசயம் என்ற கூடுதல் அங்கீகாரம் கிடைக்குமா என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாடாளுமன்றக் குழுவின் இந்த அறிவிப்பு தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கும் அதிகாரப்பூர்வ உலக அதிசய அங்கீகாரம் கிடைப்பதற்கும் இடையே நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள் நிறைவேறி தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயமாக அங்கீகரிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.