விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Author: Bhavani அரசியல்

ஜோதிடத்தை தனி மனிதன் பின்பற்றுவதால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதேசமயம், ஜோதிடத்தை பின்பற்றுபவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து, அதையொட்டி அவர்கள் எடுக்கும் முடிவுகள் மக்களை பாதிக்கும் போதுதான் சர்ச்சைகள் வெடிக்கின்றன. இப்படியான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு. இடைத்தேர்தல் தொடங்கி அரசு விழாக்களுக்கான இடம் தேர்வு வரை எடுக்கப்படும் அனைத்து முடிவுகளிலும் ஜோதிடக் கணிப்புகள் குறுக்கிடுவதால், கடைசி நேரத்தில் தலைமையிடமிருந்து என்ன மாறுதல் வருமோ என அதிகாரிகள் கலக்கமடைகின்றனர். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், முதல்வர் விஜய்யின் புதுக்கோட்டை, ஈரோடு விசிட் என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்! 

இதுகுறித்து முதல்வர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் விரிவாக பேசினார். "ஜோதிடத்தை பலமாக நம்பிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரது பாணியில், எதை செய்தாலும் ஜோதிடரை ஆலோசித்து செய்கிறவராக மாறிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். விஜய்க்கு ஆரம்பத்தில் ஜோதிடம் பார்த்துக்கொடுத்த கடலூர் சந்திரசேகர் ஒரு கட்டத்தில் மாற்றப்படவே ஜெயலலிதா, சசிகலா, டெல்லி பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் டெல்லி அதிகாரிகளுக்கு ஜோதிடம் பார்த்துக்கொடுத்த ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அந்த இடத்துக்கு வந்தார்.

முதல்வர் அறை டூ தலைமைச் செயலகம்!

புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் முதல்வரின் அறையைத்தான் இதுவரை ராஜாஜி தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை பயன்படுத்தி வந்தனர். 'முதல்வர் விஜய் கடக ராசி, பூசம் நட்சத்திரம், கன்னி லக்னம் கொண்டவர். எனவே அவருக்கு அந்த அறை ஜாதகப்படி சரிவராது. கடலைப் பார்த்தபடி இருக்கும்  அறையில் அமர்ந்தால் தொடர் வெற்றிகள் சூழும்' என்று ஜோதிடர் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் இருந்த அரசு அதிகாரிகளின் அறைகளை காலி செய்துவிட்டு 6.17 கோடி ரூபாய் செலவில் புதிய அறை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மேலும், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதன் பின்னணியிலும் ஜோதிடம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. அதுவும் கடலைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும் என்பதால் பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மீனவர்களின் தொடர் போராட்டத்தால் அரசாணை வெளியிட்டதோடு அமைதியாக இருந்த தவெக அரசு, சமீபத்தில் சத்தமில்லாமல், அங்கிருக்கும் பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்திருப்பதன் மூலம் மீனவர்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்த முடிவு எடுத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நள்ளிரவில் பறக்கும் உத்தரவுகள்!

இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தொடர்ந்து, ஏனைய ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் எனும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி இப்போதிருந்தே களப்பணிகளைத் தொடங்கிட ஜோதிடம் பார்த்து முடிவெடுத்திருக்கிறது விஜய் முகாம். இந்த நிலையில், அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டைக்கும், நவம்பர் 3ம் தேதி பெருந்துறைக்கும் விஜய் சென்றார்.

முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தான் முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்றன. இந்த நிலையில், நவம்பர் 1ம் தேதி புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா தலைமையில் தி.மு.கவினர், 'தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்படுவதால் நாங்கள் கொண்டாடுகிறோம்' என்று சொல்லி பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்தனர். இதையறிந்த முதல்வர் விஜய் அப்செட் என்கிறார்கள்.

அப்போது ஜோதிடர், 'புதுக்கோட்டை ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. எவ்வித வற்புறுத்தலுமின்றி தானாக தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தவர் மாமன்னர் ஸ்ரீ பிரஹதாம்பாள்தாஸ் ராஜகோபால தொண்டைமான். நீங்கள் முதல்வர் என்பதால் ராஜாவாகவே சென்றுவிட்டு வரவேண்டும். அதற்கு ஆயுதப்படை மைதானம் செட் ஆகாது. அதனால்தான் இந்த குளறுபடிகள் எல்லாம் ஏற்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் அரண்மனையில் விழாவை நடத்துவதே சரியானது' என்று சொன்னதாக கூறப்படுகிறது.

அதன்படி, நள்ளிரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர் பர்வேஸுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு விழாவுக்கான இடத்தை மாற்றும்படி உத்தரவு பறந்திருக்கிறது. ஆயுதப்படை மைதானத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஏற்பாடுகள் செய்திருந்தபோதும் அதிகாரிகளும் அமைச்சரும் இரவோடு இரவாக, ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள அரண்மனையில் விழா ஏற்பாடுகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை, பெருந்துறை... மாறிய காட்சிகள்!

புதுக்கோட்டையைத் தொடர்ந்து, மறுநாள் பெருந்துறை தொகுதியில் நடந்த நிகழ்ச்சியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெருந்துறை தொகுதியில் முதலில் தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் தான் அரசு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அந்த இடம் முதல்வருக்கு ஆகாது என்று சொல்லப்படவே, உடனடியாக பெருந்துறை காஞ்சிக்கோயில் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்திற்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டிருக்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 600ல் இருந்து 200 ஆக குறைக்கப்பட்டது. இதற்கும் சில கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.

ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்!

சினிமாவில் நடிக்கும்போதிருந்தே விஜய்க்கு ஜோதிடம் பார்க்கப்பட்டாலும், அதெல்லாம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. ஏற்பாடாகத்தான் இருந்ததே தவிர, விஜய்க்கு அதில் ஈடுபாடு கிடையாது. கொரோனா காலத்தில் வருமான வரித்துறை ரெய்டு, படப்பிடிப்பு தளத்திலேயே வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது. 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதம் என தொடர் சிக்கல்களில் இருந்தார் விஜய் அச்சமயம்தான் ஜோதிடத்தின் மீது அவரது பார்வை திரும்பியிருக்கிறது. அப்போது பரிட்சய மானவர்தான் ரத்தன் பண்டிட் வெற்றிவேல். அவர் கணித்த ஒவ்வொன்றும் தனக்கு தொடர்ச்சியாக நடந்ததால், அவரையே ஆஸ்தான ஜோதிடராகவும் மாற்றிக்கொண்டார் விஜய் கட்சிக்கான பெயர் தொடங்கி கட்சியின் கொடியில் உள்ள சின்னம், நிறம், வாகை மலர் எல்லாமே ஜோதிடக் கணிப்பின்படிதான் மேற்கொள்ளப்பட்டன என்கிறார்கள்.

பை எலெக்ஷன் பரிகாரங்கள்

இந்த நிலையில் கடந்த அக்டோபர் இறுதி முதல் வருகிற பிப்ரவரி இறுதி வரை முதல்வர் விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருப்பதால் விஜய் தரப்பு பதற்றமாகியிருக்கிறது. முன்னதாக விஜய் தனது முகத்தைக் காட்டினாலே போதும், வாக்குகள் விழுந்துவிடும் என்ற பிம்பம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது.

இதனால் அடுத்த வரக்கூடிய ஐந்து தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுக்கோட்டை பெருந்துறை தொகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய் அது மட்டுமல்லாமல், வழக்கமாக வெள்ளிதோறும் பட்டு வேட்டி, பட்டு அணிவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய், இந்த முறை இந்த பயணம் முழுக்க பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்திருந்ததும் ஜோதிடரின் ஆலோசனைப்படிதான் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக நவம்பர் 14ம் தேதி அம்பாசமுத்திரம் செல்லும் கொண்டாடுகிறார். அதற்கடுத்து கரூருக்கும், திருச்சி கிழக்கு தொகுதிக்கும் கூட ஜோதிடர் கணிப்புப்படி விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

இதற்கிடையே எதிர்வரும் இடைத்தேர்தலில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜோதிடரை அழைத்துப் பேசியிருக்கிறது தவெ.க. முகாம். அப்போது 'இந்த ஐந்து தொகுதிகள் மட்டுமின்றி, இன்னும் மூன்று தொகுதிகளும் காலியாகி, மொத்தம் எட்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரப்போகிறது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெறுவது சிரமம்' என்று கணித்துச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மேலும், 'இடைத்தேர்தல் அத்தனையிலும் வெற்றிபெற வேண்டுமென்றால் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். சர்வமத வழிபாட்டுத்தளங்களுக்குச் சென்று ஆலய வழிபாடு செய்ய வேண்டும்' என்றும் எந்த நாளில், எந்த திசையில், என்ன நிற உடை அணிந்து இதைச் செய்ய வேண்டும் என ஜோதிடர் குறித்துக்கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி, விரைவில் விஜய் ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல ஆரம்பிப்பார்" என விரிவாக சொல்லி முடித்தார்.

இதற்கான விளக்கம் கேட்டு தவெக துணைப் பொதுச்செயலாளர் வைகைச்செல்வனைத் தொடர்புகொண்டோம். "முதலமைச்சர் என்பவர் நேரம் காலம் பார்ப்பது என்பது தொன்றுதொட்டு வரக்கூடிய பாரம்பரிய பழக்கம் ஆனால், எல்லாவற்றுக்கும் பார்ப்பார்கள் என்பதெல்லாம் கற்பனைக்கு மிஞ்சியது. அரசு சிஸ்டத்தில் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள் என பலர் இருக்கிறார்கள். எல்லோரும் இணைந்து தான் அரசை வழிநடத்துகிறார்களே தவிர, முழுக்க முழுக்க ஜோதிடத்தை நம்பித்தான் முதல்வர் இருக்கிறார் என்பது உண்மைக்குப் புறம்பானது" என்றார்.

ஜோதிடம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கணிக்கப்படுகிறது. ஏன்.. தமிழகத்தில் பகுத்தறிவுக் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க.வின் மேலிட பிரமுகர்கள் பலரும் ஜோதிடத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல ஜோதிடம் என்பது தனிப்பட்ட மனிதரின் நம்பிக்கை, உரிமை. அந்த தனிநபர் நம்பிக்கையில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதேசமயம், பல கோடி மக்களுக்கு பொறுப்பான ஓர் அரசே ஜோதிடத்தை பின்பற்றுவது சரியன்று. இந்த ஆட்சி செம்மையாக நடக்க முதல்வர் விஜய் தனது மனதில் பதிந்து வைத்திருக்கும் நேர்மையான ஆட்சியை தர வேண்டும்' என்கிற ஒற்றை லட்சியமே போதுமானது, ஜோதிடங்களைவிட பலம் மிக்கது நேர்மை!