மாஸ் ஹீரோ இமேஜை ஒதுக்கிவைத்த சூர்யா... ஜீத்து மாதவனின் வித்தியாசமான ஆட்டம்!

மாஸ் ஹீரோ இமேஜை ஒதுக்கிவைத்த சூர்யா... ஜீத்து மாதவனின் வித்தியாசமான ஆட்டம்!

காமெடி, கிரைம், சஸ்பென்ஸ் என சுவாரஸ்யமாக நகரும் ஜீத்து மாதவனின் திரைக்கதையில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பு கவனம் ஈர்த்தாலும், கொலை செய்யப்படுபவர்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது சிறிய குறை.

Author: Bhavani சினிமா

சூர்யா யார்..?

யாராலும் கண்டுபிடிக்க முடியாத கிரிமினல் குற்றங்களை எல்லாம் அவர்கள் செய்யும் சம்பவங்களை காதால் கேட்டே கரெக்டாக கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்த புலன் விசாரணை போலீஸ் அதிகாரி... அரை டவுசர் டி ஷர்டில் அவர் பண்ணும் அலப்பறைகள் அக்மார்க் சூர்யா பிராண்ட். ஆனால் அவருக்கு ஒரு சின்ன பிரச்னை… அதான் செம ட்விஸ்ட்…

அப்பா ஆனந்தராஜ் தடய அறிவியல் புலி, ஆனால் அவருக்கு அடிக்கடி மெமரி லாஸ் வந்துவிடும், வந்தால் உடனே போகாது... ஒரு குழந்தையாகவே மாறி விடுவார்... அம்மா கிரிமினல் சைக்காலஜியில் புலி ஆனால் தண்ணி வண்டி ... இருவரும் செய்யும் காமெடி செம கலாட்டா...

நஸ்ரியா சூர்யாவின் உதவியாளர், அவர் என்ன உதவி செய்கிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்வதுதான் ஸ்வாரஸ்யம்... வில்லன் நஸ்லென் வெரி சிம்பிள்... பால் வடியும் முகத்துடன் அந்த விடலை பையன், செய்யும் வேலைகள் எல்லாம் வேற லெவல்... ரெண்டு வெத்து வேட்டுகளை வைத்துக் கொண்டு அவன் செய்யும் அட்டகாசங்கள் அதிரடி...

கதை இதுதான்..  

சூர்யா ஒரு சீரியல் கில்லரை கஷ்டப்பட்டு பிடித்து சிறையில் அடைக்க, அவன் பாணியில் மேலும் கொலைகள் தொடர்கிறது... அதை செய்வது யார்? சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான்... 

சாதாரண புலன் விசாரணை கதை தான் என்றாலும் சம்பவங்கள் புதுசு, அதை கொஞ்சம் காமெடியுடன் நக்கலாக, நறுக்கென இயக்குநர் ஜீத்து மாதவன் சொல்லியிருப்பது சுறுக்கென்று இருக்கிறது... 

ஓபனிங் கல்லறை தோட்ட காட்சியில் வில்லன் நஸ்லெனை  அறிமுகம் செய்யும் விதம் புதுமை. புதுமை. அதிலிருந்து கிளைமேக்ஸ் வரை அந்த வில்லன் கேரக்டரையும், திரைக்கதையையும் தடம் புரளாமல் கச்சிதமாக இயக்குநர் நகர்த்தி செல்வது சபாஷ். 

சூர்யா தன் ஒரு மாஸ் ஹீரோ என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மிகையில்லாமல் செய்திருப்பது அடக்கம், அழகு. அவரும் நஸ்ரியாவும் பேசிக்கொண்டே நடந்துபோகும் காட்சி சாதாரணமாக ஆரம்பித்து எமோஷனலாக முடிவது இதயத்தை தொடுகிறது. நஸ்ரியாவின் நடிப்பு மட்டுமல்ல ஆக்‌ஷனிலும் கலக்குகிறார். லால் பழைய ஜனகராஜை ஞாபகப்படுத்துகிறார்... ஆனந்தராஜ் அசத்தல். ஒளிப்பதிவு இசை உறுத்தல் இல்லாமல் படத்தோடு இயல்பாக  செல்கிறது. 

வழக்கமான சீரியல் கில்லர் படங்கள் போலவே இதிலும் கொலை செய்யப்படுபவர்களுக்கு கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லாததை தவிர்த்திருக்கலாம்...