உலகம்

அமெரிக்காவில் பயங்கரம்: 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பயங்கரம்: 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!
Indian Origin New Jersey Woman Arrested, Charged With Murder Of 2 Sons
அமெரிக்காவில் வசித்து வரும் பிரியதர்ஷினி நடராஜன் என்பவர், தனது இரண்டு மகன்களையும் கொலை செய்ததாகக் கூறி அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ஆம் தேதி மாலை, வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிரியதர்ஷினியின் கணவர், தனது இரண்டு மகன்களும் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தந்தையின் புகாரும் காவல் துறையின் நடவடிக்கையும்

குழந்தைகளின் நிலைமையைக் கண்டு பதற்றமடைந்த தந்தை, உடனடியாக அமெரிக்க அவசர உதவி எண்ணான "911"-க்கு அழைத்துள்ளார். தனது குழந்தைகளுக்கு அவரது மனைவி ஏதோ செய்துவிட்டதாக அவர் புகாரளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பிரியதர்ஷினி நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் அவர்களது வீட்டில் சோதனை நடத்தி, முக்கியத் தடயங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

காரணம் குறித்த மர்மம்

குழந்தைகள் இருவரும் எதற்காகக் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் கூராய்வு செய்யப்பட்ட பிறகே, கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் முறை குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.