உலகம்

"இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்தையே கிடையாது"- ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


Iran
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். "ஈரான் எங்களுடன் பேசத் தயாராக இருக்கிறது" என்று டிரம்ப் தெரிவித்த கருத்தை, ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு

முன்னதாக, குவைத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் எப்-15 (F-15) போர் விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. தாக்கப்பட்ட அந்த விமானம் செல்போன் கோபுரம் (Tower) மீது மோதி கீழே விழுந்த போதிலும், அதன் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையினர் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குவைத் மற்றும் சைப்ரஸ் மீது ஈரான் தாக்குதல்

கடந்த மூன்று நாட்களாகக் குவைத் மீது ஈரான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக துபாய், அபுதாபி மற்றும் குவைத் ஆகிய முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தளத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சைப்ரஸ் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பதற்றத்தில் வளைகுடா நகரங்கள்

ஈரான் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் துபாய், அபுதாபி மற்றும் தோஹா ஆகிய நகரங்கள் குண்டு வெடிப்புச் சத்தங்களால் அதிர்கின்றன. போர் தீவிரமடைந்து வருவதால் இப்பிராந்தியத்தில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.