காஞ்சிபுரம் மாவட்டம், பனங்காட்டூர் கிராமத்தில் 66 செண்ட் விவசாய நிலத்தை, சந்திரபாபு என்பவர், தனது மனைவி பகுத்தறிவு பெயரில் வாங்கினார். பத்திரப்பதிவின் போது, குறைந்த முத்திரைத் தாள் கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கக் கூறி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மோகனசுந்தரத்துக்கு பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டது.
விவசாய நிலத்தை குடியிருப்பாக கருதியுள்ளதாகக் கூறி, வழிகாட்டி மதிப்பை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்ச் சந்திரபாபு, மோகனசுந்தரத்தை கேட்டுக் கொண்டார்.
சதுர அடி 400 ரூபாய் என்ற வழிகாட்டி மதிப்பை, 230 ரூபாயாக நிர்ணயிக்க 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார், மோகனசுந்தரம். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபாபு, இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை பெற்ற போது, மோகனசுந்தரமும், அவரது உதவியாளரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட மோகனசுந்தரம், அவரது உதவியாளர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா, மோகன சுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதேபோல, மோகனசுந்தரத்தின் உதவியாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, வழக்கில் பல்டி சாட்சியம் அளித்த புகார்தாரர் சந்திரபாபுவுக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
LIVE 24 X 7









