தமிழ்நாடு

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!
Goondas on policemen
ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த தாய், மகள் இருவரில், இளம்பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய இரண்டு காவலர்களும் இன்று (அக். 29) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தது எப்படி?

கடந்த செப்டம்பர் 29 அம தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து வாழைத்தார் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலைக்கு மினி வேனில் வந்த உறவினரிடம், கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறித் தாய் மற்றும் மகள் லிப்ட் கேட்டு வந்துள்ளனர்.

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச் சாலை அருகே நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் மற்றும் சுந்தர் என்ற இரு காவலர்கள் வேனை வழிமறித்து, தாய், மகள் இருவரையும் மிரட்டி கீழே இறங்கச் செய்துள்ளனர். அப்போது, தாங்கள் அண்ணாமலையாரைப் பார்க்க லிப்ட் கேட்டு வருவதாகப் பெண்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, நாங்களே உங்களைக் கோயிலில் இறக்கிவிடுகிறோம் என்று கூறி, அந்தப் பெண்கள் இருவரையும் தனித்தனியாகப் பைக்கில் அமர வைத்து, திருவண்ணாமலை நோக்கிச் செல்லாமல் விழுப்புரம் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குக் கடத்திச் சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் மீட்பு

காவலர்கள் இருவரும் இருட்டான இடத்தில் திடீரென்று தாயை மட்டும் சாலையோரப் பள்ளத்தில் தள்ளிவிட்டு, இளம்பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து, அந்தக் காவலர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணைத் தூக்கிச் சென்று இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடியற்காலை 4 மணிக்கு இளம்பெண்ணை அழைத்து வந்து சாலையில் இறக்கிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

சாலையில் அழுதுகொண்டே நடந்த அந்தப் பெண், அங்குள்ள செங்கல் சூளைக்குச் சென்று உதவி கேட்டுள்ளார். அப்போது அங்கே அவரது தாயும் வந்துள்ளார். மகளுக்கு நேர்ந்த கதியைக் கண்டு நெஞ்சம் உடைந்த தாயுடன், செங்கல் சூளை ஊழியர்கள் காவல்துறைக்கும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்து, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் நடவடிக்கை

காவலர்களே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாக விசாரணையில் இறங்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட இந்தக் காவலர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, ஆந்திர இளம்பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த இந்த இரண்டு காவலர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இந்த அதிரடி உத்தரவைப் இன்று பிறப்பித்துள்ளார்.