Breaking news

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!
Edappadi Palaniswami and Sengottaiyan
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அ.தி.மு.க.-வின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இபிஎஸ் vs செங்கோட்டையன்

அ.தி.மு.க.-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் செங்கோட்டையன் பகிரங்கமாக முன்வைத்து, எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்திருந்தார். செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சிப் பொறுப்புகள் எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று (அக். 30) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் ஒன்றாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க.வுக்கு யார் துரோகம் செய்தாலும், தலைமையின் கருத்தை முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டாலும் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

இந்தச் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.