Breaking news

'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியீடு? U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியீடு? U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
JanaNayagan Movie Case
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்துள்ள உத்தரவின்படி, படத்திற்கு உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் வெளியீட்டுக்கு இருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தணிக்கை வாரிய உத்தரவு ரத்து

கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து, எச். வினோத் இயக்கிய 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 9) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், தயாரிப்பு நிறுவனம் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி பி.டி. ஆஷா, 'ஜனநாயகன்' படத்தை மறு ஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைத்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

'ஒரு உறுப்பினரின் புகாரால் மறு ஆய்வு தவறானது'

தணிக்கைத் துறை குறித்துத் தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்த நீதிபதி, "சென்சார் போர்டு இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்தார்.

மேலும், "ஒரு உறுப்பினரின் புகாரைக் கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்? பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்தால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியாக வேண்டும்," என்றும் நீதிபதி திட்டவட்டமாகக் கூறினார். 'ஜனநாயகன்' திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

நாளை ரிலீஸ் ஆக வாய்ப்பு

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்க வழி பிறந்துள்ளது. இதனால், இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், உடனடியாகச் சான்றிதழ் பெறப்பட்டு ஓரிரு நாட்களில், அதாவது நாளை (ஜனவரி 10) அல்லது அதற்குள்ளாகவே ரிலீஸ் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.