Breaking news

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!
Vijay appears at the CBI office
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளின் நேரடி விசாரணைக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம்பெறாதபோதிலும், இந்தச் சம்பவம் குறித்து அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சென்ற விஜய்

சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற விஜய், காலை 11 மணிக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுமார் 11.30 மணியளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

அவருடன் த.வெ.க. நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உட்பட ஆறு பேர் டெல்லிக்குச் சென்றனர். கடந்த டிசம்பர் மாதம் இதேபோல், த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது விஜயிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. கார் பயணம் செய்து விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விஜய்யின் வருகை காரணமாக சி.பி.ஐ. அலுவலகத்தைச் சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணைக்கு ஆஜரான பிறகு, விஜய் நாளை (ஜனவரி 13) செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.