விளையாட்டு

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி.. இந்திய அணி படுதோல்வி!

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா.

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி.. இந்திய அணி படுதோல்வி!
India vs Australia T20
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவின் தடுமாற்றம்

மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா மட்டுமே 68 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி வெற்றி

இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் வீசிய ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ் (46 ரன்கள்) அதே ஓவரில் வெளியேறினார். இருப்பினும், ஜோஷ் இங்லிஸ் (20 ரன்கள்) மற்றும் மிட்செல் ஓவன் (14 ரன்கள்) ஆகியோரின் துணையுடன் ஆஸ்திரேலிய அணி வெறும் 13.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது போட்டி வரும் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.