தமிழ்நாடு

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. திருமண மோசடி வரிசையில் டெண்டர் முறைகேடு!

திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. திருமண மோசடி வரிசையில் டெண்டர் முறைகேடு!
Madhampatti Rangaraj
நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கொடுத்த திருமண மோசடிப் புகார் ஏற்கனவே காவல்துறை மற்றும் மாநில மகளிர் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் மீது மற்றொரு புதிய புகார் எழுந்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உணவக டெண்டரை அவர் விதிகளை மீறிப் பெற்றதாகக் குற்றம் சாட்டி, முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அளித்த புதிய புகார்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.கண்ணதாசன் என்பவர், முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு இல்லம் குடியுரிமை ஆணையர் ஆகியோருக்கு இந்தப் புகாரை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டெண்டர் விதிகளில் மீறல்?

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன், "டெல்லியில் தமிழ்நாடு அரசின் இல்லம் உள்ளது. முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரை வந்து தங்கிச் செல்வது வழக்கம். இந்த இல்லத்தில் கேண்டீன் நடத்துவதற்காகத் தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. அதற்கு மாதம்பட்டி ரங்கராஜூம் விண்ணப்பித்திருந்தார்.

இதனை அறிந்ததும், அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என அந்தத் துறை செயலாளரிடம் நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால், விதிகளை மீறி மாதம்பட்டி ரங்கராஜுக்கு அந்த இல்லத்தில் உணவகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை வளையத்தில் உள்ளவருக்கு டெண்டரா?

டெண்டர் விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் உணவகம் நடத்தி இருக்க வேண்டும், 120 பேர் சாப்பிடும் அளவுக்கு வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல விதிகள் உள்ளன. ஆனால், அந்த விதிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உட்படவில்லை.

முக்கியமாக, அவர் மீது பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியது குறித்த புகார் விசாரணையில் உள்ளது. காவல்துறை விசாரணை வளையத்தில் இருக்கும் ஒருவருக்கு அரசு டெண்டர் வழங்கி இருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எனக்கும் அந்தப் புகார் கொடுத்த பெண்ணிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, நான் அவர் தரப்பு வழக்கறிஞரும் இல்லை. மாதம்பட்டி ரங்கராஜூக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நான் அந்தத் துறை செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விதிகளை மீறி ரங்கராஜுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என்று கூறினேன். அவரும் கொடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால், பொய்யாகத் தெரிவித்துவிட்டு அந்த டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்று வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு பதில்

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் விளக்கம் பெறுவதற்காக அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை.