இந்தியா

பீகார் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் வேட்பாளர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் மீது குற்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் வேட்பாளர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
Bihar poll candidates face criminal charges
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் பீகார் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் இணைந்து வேட்பாளர்களின் குற்ற மற்றும் நிதிப் பின்னணிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை, பீகாரில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தரவு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

குற்றப் பின்னணி விவரம்

தேர்தலில் போட்டியிடும் 1,314 வேட்பாளர்களில், 1,303 பேரின் பிரமாணப் பத்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின்படி, மொத்த வேட்பாளர்களில் 423 பேர் (32%) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களில் 354 பேர் (27%) தங்கள் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தீவிர குற்றச்சாட்டுகளில், 33 பேர் கொலை வழக்குகளிலும், 86 பேர் கொலை முயற்சி வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், 42 பேர் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, இரண்டு வேட்பாளர்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் பாலியல் வன்கொடுமை (Rape) குற்றச்சாட்டுகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கட்சி வாரியான குற்றச்சாட்டுகள்

கட்சிகள் தங்கள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள நபர்களில் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் சதவீதம் கட்சி வாரியாகப் பின்வருமாறு:

சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ.(எம்.) ஆகிய கட்சிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் (ஒவ்வொரு கட்சியிலும்) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சியின் 14 வேட்பாளர்களில் 13 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* ஆர்.ஜே.டி. (RJD) கட்சியின் 70 வேட்பாளர்களில் 53 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* பா.ஜ.க. (BJP) கட்சியின் 48 வேட்பாளர்களில் 31 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* காங்கிரஸ் கட்சியின் 23 வேட்பாளர்களில் 15 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் 13 வேட்பாளர்களில் 7 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* ஜனதா தளம் (யுனைடெட்) - ஜே.டி.(யு) கட்சியின் 57 வேட்பாளர்களில் 22 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* ஜன் சுராஜ் கட்சியின் 114 வேட்பாளர்களில் 50 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* ஆம் ஆத்மி கட்சியின் 44 வேட்பாளர்களில் 12 பேர் மீது வழக்குகள் உள்ளன.

* பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) யின் 89 வேட்பாளர்களில் 18 பேர் மீது வழக்குகள் உள்ளன.

நிதி மற்றும் கல்வி விவரம்

போட்டியிடும் வேட்பாளர்களில் 519 பேர் (40%) கோடிஸ்வரர்கள் ஆவர். இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 3.26 கோடி ஆகும்.

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, 519 வேட்பாளர்கள் (40%) 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான படிப்பை முடித்துள்ளனர். 651 வேட்பாளர்கள் (50%) பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட உயர் கல்வித் தகுதியைக் கொண்டுள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ளது, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.