வீராங்கனைகளுக்கு நேர்ந்த கொடூரம்
இந்தியா மற்றும் இலங்கையில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 25ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் போட்டி நடைபெற்றது. இதற்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அப்போது, அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் மட்டும், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு நடந்து சென்றுள்ளனர். அவர்களைப் பைக்கில் பின்தொடர்ந்து வந்த நைத்திரா (29) என்ற இளைஞர், வீராங்கனைகளைத் தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான அந்த இளைஞரைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்தது.
பாஜக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "எப்போதாவது வீராங்கனைகள் வெளியே செல்லும்போது, நாம் வெளியே செல்லும்போதுகூட உள்ளூரைச் சேர்ந்த ஒருவரிடம் கூறிவிட்டுத்தான் செல்வோம். மைதானம், ஹோட்டலை விட்டு வெளியே செல்லும்போது பாதுகாவலர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளிடம் கூறிவிட்டுச் செல்ல வேண்டும். இதை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
"கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படும்"
அவர் மேலும் தொடர்ந்தபோது, "கிரிக்கெட் வீரர்-வீராங்கனைகளுக்கு இங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தில் கால்பந்தை போன்று இந்தியாவில் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன். நாங்கள் ஹோட்டலில் அமர்ந்திருந்தபோது, பல இளைஞர்கள் வந்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒரு இளம்பெண், மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் ஒருவருக்கு முத்தம் கொடுத்தார். அந்த வீரரின் உடைகள் கிழிக்கப்பட்டன.
"வீராங்கனைகளுக்கும் இது ஒரு பாடம்"
சில நேரங்களில் வீரர்களுக்கு அவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் என்பது தெரியாது. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீராங்கனைகளுக்கு நடந்த இந்தச் சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்" என்று அவர் தெரிவித்தார்.
கிளம்பிய கண்டனங்கள்
பாதுகாப்பு குறைபாட்டைச் சுட்டிக்காட்டாமல், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளே கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பது போலவும், இது அவர்களுக்கும் ஒரு பாடம் என்பது போலவும் பாஜக மந்திரி கைலாஷ் விஜய்வர்கியா பேசியிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









