உலகம்

போர் நிறுத்தம்: சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது ஈரான்!

இரண்டு மாதங்களுக்கு பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகளை ஈரான் தொடங்கி இருக்கிறது.

போர் நிறுத்தம்: சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது ஈரான்!
Iran
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர்ச் சூழல் காரணமாக முடக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் மூண்டது. இதன் பாதுகாப்பு கருதி ஈரானின் வான்வழிப் பாதைகள் அனைத்தும் முழுமையாக முடக்கப்பட்டன. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் அரசு தனது வான்வெளியை மீண்டும் திறந்து சர்வதேச நாடுகளுடனான வணிக ரீதியான விமான சேவைகளைத் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

முக்கிய நாடுகளுக்குப் புறப்பட்ட விமானங்கள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக துருக்கியின் இஸ்தான்புல், ஓமனின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் மதீனா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. குறிப்பாக, இஸ்தான்புல் நகருக்கு மட்டும் இன்று மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்

விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்னும் முழுமையான அமைதி திரும்பாததால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் தொடர்கின்றன. ஈரானில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.