தொழில்நுட்பம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுக்கான மெட்டா நிறுவனத் தலைவர் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு!
Meta
பிரதமர் மோடி குறித்துச் சமூக வலைதளங்களில் அவதூறான வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்ததாக இந்தியாவுக்கான மெட்டா நிறுவனத் தலைவர் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சிப் போராட்டங்களின் போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலும், போலி டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இத்தகைய பதிவுகள் பொதுமக்களிடையே வெறுப்பையும் அமைதியின்மையையும் தூண்டி, நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் இருப்பதாக தொழிலதிபர் எஸ்.அரவிந்த் ரெட்டி மற்றும் தெலுங்கானா பாஜக நிர்வாகி டி.சாய்கிரண் கௌட் ஆகியோர் புகாரளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் நிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களின் பின்னணியில், சமூக வலைதளக் கட்டுப்பாடுகள் மற்றும் விதமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ சிறிது நேரம் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.