Instagram-ல் பதிவுகள் அல்லது Reels-ஐ பகிரும்போது, சில பயனர்களுக்கு புதிதாக ‘Muse’ என்ற ஐகான் தோன்றத் தொடங்கியுள்ளது. இதனால், இது என்ன புதிய வசதி? இதன் மூலம் என்ன செய்ய முடியும்? என்ற கேள்விகள் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இந்த புதிய வசதி, Meta நிறுவனம் தனது AI தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. வழக்கமான சாட்போட்களைப் போல பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பதைத் தாண்டி, AI Agent ஆக செயல்படும் வகையில் Muse உருவாக்கப்பட்டுள்ளது.
Muse என்றால் என்ன?
பொதுவாக AI சாட்போட்கள் பயனர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, தகவல்களை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கின்றன. ஆனால் Muse, ஒரு டிஜிட்டல் தனிப்பட்ட உதவியாளர் போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனர்களுடன் ஏற்கெனவே நடைபெற்ற உரையாடல்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்ளும் திறன் Muse-க்கு உள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும் ஒரே தகவல்களை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் குறையும்.
Muse-ஐ அதன் இணையதளம் மட்டுமின்றி WhatsApp மற்றும் iOS, Android ஆகியவற்றுக்கான பிரத்யேக செயலிகள் மூலமாகவும் பயன்படுத்த முடியும். இதனைப் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. வழக்கமான உரையாடல் முறையிலேயே பயனர்கள் தங்களது தேவைகளைத் தெரிவிக்கலாம்.
என்னென்ன பணிகளை செய்யும்?
Muse-ன் முக்கிய அம்சங்களில் ஒன்று Long-term Memory எனப்படும் நீண்டகால நினைவுத்திறன். பயனர் முன்பு கூறிய தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம், அடுத்தடுத்த பணிகளை மேலும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள உதவும்.
அதேபோல், Proactive Planning எனப்படும் முன்கூட்டியே திட்டமிடும் வசதியும் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆதரிக்கப்படும் செயலிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, பயனரின் முந்தைய தகவல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தேவையான பரிந்துரைகளை வழங்க முடியும்.
உதாரணமாக, மின்னஞ்சலில் இடம்பெறும் முக்கிய தகவல்களின் அடிப்படையில் நினைவூட்டல்களை உருவாக்குவது, ஏற்கெனவே வாங்கிய பொருட்களை கருத்தில் கொண்டு ஷாப்பிங் பரிந்துரைகளை வழங்குவது, தனிப்பட்ட உடற்பயிற்சி திட்டங்களை உருவாக்குவது போன்ற பணிகளில் Muse உதவக்கூடும்.
ஷாப்பிங் முதல் பணம் செலுத்துவது வரை!
Muse-ல் AI அடிப்படையிலான ஷாப்பிங் வசதிகளும் இடம்பெறுகின்றன. ஆதரிக்கப்படும் டிஜிட்டல் வாலெட்டுகள் மற்றும் சேவைகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், ஆன்லைனில் பொருட்களைத் தேர்வு செய்வது முதல் வாங்குவது மற்றும் பணம் செலுத்துவது வரையிலான செயல்பாடுகளிலும் இது உதவ முடியும்.
அதேநேரத்தில், இத்தகைய AI Agent-களின் செயல்பாடுகளில் பாதுகாப்பும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்வதற்கு முன்பு பயனரின் அனுமதியைப் பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
AI Agent-களின் அடுத்தகட்டம்?
AI தொழில்நுட்பத்தை வெறும் கேள்வி-பதில் கருவியாக இல்லாமல், பயனர்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள உதவும் தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளராக மாற்றும் முயற்சியில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில், Instagram-ல் சில பயனர்களுக்கு தோன்றத் தொடங்கியுள்ள ‘Muse’ ஐகான், Meta-வின் AI Agent முயற்சியின் முக்கியமான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் சமூக வலைதளங்களுக்குள் AI உதவியாளர்கள் மேலும் ஆழமாக ஒருங்கிணைக்கப்படுவதற்கான தொடக்கமாகவும் இது அமையக்கூடும்.
LIVE 24 X 7









