தமிழ்நாடு

இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் அமளி!

எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் அமளி!
TN Assembly
தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்ற போது, கட்சித் தாவல் மற்றும் ஆட்சி குறித்த விமர்சனங்களால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் பெரும் அமளி நிலவியது.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழலில் ஒரு கட்சியில் வெற்றி பெற்றுப் பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இத்தகைய 'குதிரை பேரங்களை'த் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அவையில் வலியுறுத்திப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சைத் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி போன்றவை தமிழகத்திற்குள் வரவில்லை எனக் குறிப்பிட்டார். 2017-க்குப் பிறகு அமைந்த அதிமுக அரசு சுயநலத்திற்காக டெல்லியிடம் சரணடைந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், அது உண்மையான அதிமுக ஆட்சியாகச் செயல்படவில்லை என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்று சாடினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 'குதிரை பேரம்' விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், கொந்தளிப்பில் ஈடுபட்ட இருதரப்பு உறுப்பினர்களையும் சமாதானப்படுத்தினார்.