மின்வெட்டு த.வெ.க. அரசுக்கு தீராத தலைவலியாக மாறிவருகிறது. இந்த நிலையில், 'அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு பதிலாக, குறைந்த விலையில் சோலார் மின் உற்பத்தி மூலம், பொதுமக்களிடம் இருந்தே மின்சாரத்தை வாங்கலாம்' என்று யோசனை சொல்கிறார்கள் சோலார் மின் தயாரிப்பாளர்கள்.
அனல், அணு, ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்களை மட்டுமே தமிழ்நாடு மின்வாரியம் சொந்தமாக வைத்திருக்கிறது. வாயு, சோலார், காற்றாலை மின் உற்பத்தி முழுக்க தனியார் வசம் உள்ளன. சொந்த மின் உற்பத்தியிலும், வெளிச்சந்தை கொள்முதலிலும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனாலேயே அதிக விலை கொடுத்து மின்கொள்முதல் செய்யும் நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில்கூட 35 முதல் 41 ரூபாய் வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்க இருந்தனர். இது சர்ச்சையானதும், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கடந்த அக்டோபர் 29ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத்தை சேமிக்க புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, சோலார் மின் உற்பத்தி மூலம் மிகக் குறைந்த விலையில், பொதுமக்களிடம் இருந்தே மின்சாரத்தை கொள்முதல் செய்யும் யோசனையைச் சொல்கிறார்கள் சோலார் மின் தயாரிப்பாளர்கள்.
சோலார் மின் உற்பத்தியைப் பொறுத்தவரை தேசியளவில் 94,58,890 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 54,59,383 சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 64,58,706 இல்லங்கள் பயன்பெறுகின்றன. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 19 ஆயிரத்து ஒரு மெகாவாட். இதற்காக 34,64,894 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதுவே, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்து 36,786 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 1,11,202 சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 1,29,120 இல்லங்கள் பயன்பெறுகின்றன. இதன் மொத்த உற்பத்தி திறன் 408.51 மெகாவாட் இதற்காக 695.29 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது.
சோலார் மின் உற்பத்தியைப் பொறுத்தவரை, ஒரு கிலோ வாட்டுக்கு மானியமாக மத்திய அரசு 30 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்குகின்றன. இரண்டு கிலோ வாட்டுக்கு மானியமாக மத்திய அரசு 60 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு பத்தாயிரம் ரூபாயும் வழங்குகின்றன. மூன்று கிலோ வாட்டுக்கு மானியமாக மத்திய அரசு 78 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 22 ஆயிரம் ரூபாயும் வழங்குகின்றன. அதற்குமேல் எத்தனை கிலோ வாட் சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டாலும் இதே தொகைதான் மானியம்.
சோலார் மின் நிலையத்தில் 'ஆன் கிரிட் மற்றும் 'ஹைப்ரிட்' என இரு வகைகள் உள்ளன. இதுவரை அமைக்கப்பட்டுள்ள 90 சதவிகித சோலார் மின் நிலையங்கள் 'ஆன்கிரிட் முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அமைப்பானது, சோலார் பேனலில் இருந்து டி.சி. யூனிட்டாக உற்பத்தியாகும் மின்சாரம், ஏ.சி. யூனிட்டாக மாற்றப்பட்டு சேமிப்பு அலகுக்கு சென்று, நம் வீடுகளில் அமைக்கப்படும் மின் மீட்டருக்குச் செல்லும்.
வீட்டில் பயன்படுத்தியது போக மீதமுள்ளவை மின்வாரியத்துக்குச் செல்லும். இதன்மூலம், மின் கட்டணம் பாதியாக குறையும். ஆனால், இந்த அமைப்பில் மின் சேமிப்புக்கான பேட்டரி ஸ்டோரேஜ் இல்லை. பேட்டரி ஸ்டோரேஜ் ஏற்படுத்தப்பட்டால், அதில் மின்சாரம் சேமிக்கப்படும். அதை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சார வாரியத்துக்கு பயனாளர்களே விற்பனை செய்யலாம்.
தற்போது அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பை, ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன் என்பதிலிருந்து மூன்று கிலோவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையத்துக்கும் செல்லுபடியாகும் என அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அத்துடன், பேட்டரி ஸ்டோரேஜ் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் 5.50 ரூபாய்க்கு மின்சார வாரியமே கொள்முதல் செய்துகொள்ளும்' என அறிவித்தால், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக பொதுமக்களிடம் இருந்தே குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முடியும். மக்களுக்கும் மாதந்தோறும் ஒரு வருவாய்
கிடைக்கும்.
இது ஏற்கெனவே புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள திட்டம்தான். அங்கு ஆன்கிரிட்' பிரிவில் அமைக்கப்படும் சோலார் மின் நிலையத்தில் இருந்தே வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரம்போக கூடுதல் மின்சாரத்தை அம்மாநில அரசு 550 ரூபாய்க்கு பொதுமக்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. சோலார் மின் நிலையம் அமைப்பதற்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு வரும் 2027ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்போகிறது.
அதற்குள் தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தினால், இன்னும் ஏராளமான பொதுமக்கள் சோலார் மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீடுகளில் பேட்டரி ஸ்டோரேஜுடன் அமைப்பார்கள். இதன்மூலம் மின்சார வாரியத்துக்கு கோடிக்கணக்கில் ஏற்படும் செலவும் கடனும் குறையும்" என்றார்.
செய்வார்களா?
LIVE 24 X 7









