'அரிசி விலை இன்னும் உயரும்!' தமிழ்நாட்டை உலுக்கும் பொருளாதார எச்சரிக்கை!

'அரிசி விலை இன்னும் உயரும்!' தமிழ்நாட்டை உலுக்கும் பொருளாதார எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து, வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக இந்திய தொழில் முனைவோர் சங்க தேசியத் தலைவர் ரகுநாதன் எச்சரித்துள்ளார்.

Author: Bhavani தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும், விலைவாசி உயர்வுதான் சாமானிய மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், 'நிலைமை இதோடு நிற்காது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். இந்தியாவிலேயே அதிக விலை உயரும் மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது' என்று எச்சரிக்கிறார் இந்திய தொழில் முனைவோர் சங்க தேசியத் தலைவர் ரகுநாதன்!

குறையும் ஜி.எஸ்.டி. வருவாய்

ரகுநாதனிடம் பேசினோம். "ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்யும்போது கிடைக்கும் வரி, மாநிலத்துக்கு வருவாயாக மாறுகிறது. தவிர, மாநில அரசு எதற்கெல்லாம் வரி விதித்து இருக்கிறதோ அதன் மூலமும் வருவாய் கிடைக்கும். வாகன வரி, பத்திரப்பதிவு கட்டணம் என்பவை இதர வருவாய் பிரிவை சார்ந்தவை. வரவையும், செலவையும் சார்ந்ததுதான் ஒரு மாநிலத்தின் பொருளாதாரம். தமிழக வருவாயில் முக்கியப் பங்கு வகிப்பது ஜி.எஸ்டி ஆனால், கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. வரவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால், பணவீக்கத்தின் அளவுகோல் மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் அருகே இருக்கும் மாநிலங்கள் வருவாயை பெருக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நமது வருமானம் மட்டும் குறைந்துகொண்டே செல்ல காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும்.

அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை

விலை வீக்கத்தில் இந்தியாவின் சராசரியை விட, தமிழகத்தின் நிலை பரிதாபமாக இருக்கிறது. ஒரு செலவு அதிகமாகிறது என சொன்னால் வருவாய் பற்றாக்குறை அதிகமாகும். இதை ஈடுகட்டத்தான் கடன் வாங்குகிறோம். அல்லது முக்கியமான செலவுகளையோ, நீண்டகால திட்டங்களையோ தள்ளி வைக்கிறோம். இந்த இரண்டையும் செய்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும்.

கடந்த காலாண்டில் தமிழகத்தின் கடன் குறைந்திருக்கிறது என தகவல் வருகிறது. கடன் ஏன் குறைந்திருக்கிறது என்றால் சில செலவினங்கள் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அரசு இன்னமும் செலவினங்களை துவங்கவில்லை என்பதுதான் அர்த்தம். அதேசமயத்தில் வருவாய் குறைந்து செலவு அதிகமாகி இருக்கிறது. துண்டு விழுவதும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிக விலையாக 35 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்பது சரியான திட்டமிடல் இல்லை. நீண்டகால திட்டங்களை தள்ளிப்போடுவது  அபாயகரமான பாதை 'மூன்று மாதங்களுக்கு புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தமாட்டேன். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து தேவைப்படக்கூடிய திட்டங்களை அமல்படுத்துவேன்' என்பதெல்லாம் சரிதான். ஆனால் எதுவுமே சொல்லாமல் திட்டங்களை நிறுத்தி வைப்பதோ, தள்ளி வைப்பதோ தொழில் முதலீட்டு வாய்ப்புகளை சுருக்கிவிடும்.

புதிய திட்டங்களே இல்லை

இதுவரை புதிய ஒப்பந்தங்கள் எதுவும் பெரியளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. அதையொட்டிய செலவுகளும் இந்த காலாண்டில் வரவில்லை. பல பெரிய திட்டங்களை நாம் தள்ளி வைத்திருக்கிறோம். அல்லது ரத்து செய்திருக்கிறோம் என்பது மட்டுமே உண்மை. இதைப்போன்ற ஒரு சூழலில் ஒரு அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் வலுவானதாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டு வருகிறது.

இன்னொரு பக்கம் நிறைய தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவ தயக்கம் காட்டுகின்றன. பங்குச் சந்தையும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. தங்கம், டாலர் எக்ஸ்சேஞ்ச், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றைக்கு வேண்டுமானாலும் ஒரு புயலாக மாறலாம். இதை தடுக்க தமிழக அரசு என்ன முன்னேற்பாடு செய்திருக்கிறது?

ஒரு மருத்துவரிடம் செல்லும்போது நம் உடலில் இருக்கும் குறைகளை நேர்மையாக சொல்ல வேண்டும். அதை தடுக்கும் முறைகள் மற்றும் தீர்வுகளை கண்டுபிடித்து நோயை குணப்படுத்தவேண்டும். ஆனால், தமிழக அரசு அப்படி இல்லை. இதைப் பார்க்கும்போது விலைவாசி உயர்வில் சிக்கியிருக்கும் மக்களை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்ற கவலை வருகிறது. நடுத்தர மக்கள் தினமும் வாழ்க்கையை நகர்த்த சிரமப்படுகிறார்கள். எனவே நீண்டகால நிதிக் கோட்பாட்டை அரசு கொண்டுவர வேண்டும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொருளாதார நிபுணர்கள் அடங்கிய கவுன்சிலை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிட்டி என்ன செய்கிறது? எந்த தகவலும் இல்லை.

பொருளாதார நிபுணர்களிடம் பேசுங்கள்

ஒன்பது முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறார். அவரை ஏன் இன்னமும் பக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய அறிவு, திறமையை பயன்படுத்திக்கொள்ளலாமே. இதுபோல் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தாதவரை விலை இன்னும் உயர்ந்துகொண்டேதான் செல்லும் வேலை வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்தப்போகிறோம் என்பதில் த.வெ.க. அரசுக்கு தெளிவான பார்வை இல்லை. ஆறு மாதங்களாக பல மாநிலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவில்லை. நோய் இன்னமும் மோசமாகிக்கொண்டே போகிறது. வேண்டாத பேச்சுகளை தவிர்த்து, தமிழகத்தின் நலனை முதன்மையாக்கி செயல்படவேண்டிய தருணம் இது.

விலையேற்றம் எதனால் ஏற்படுகிறது, எப்படி குறைப்பது என்பதை பற்றி அரசு தெளிவாக சொல்லவேண்டும். நம்பிக்கையை வளர்க்கக்கூடிய செயல்களை ஏற்படுத்த வேண்டும். 'விலை ஏறினால் என்ன? அரசு அதை குறைத்துவிடும்' என்ற நம்பிக்கை மக்களிடம் வரவேண்டும். இதை கவனிக்க தவறினால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை அரசால் தடுக்க முடியாது. இனி வருவது மிகப்பெரிய பண்டிகை காலம் என்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும்." என்றார்.

நடுத்தர, சாமானிய மக்களின் நிலைதான் ரொம்ப பரிதாபம்!