ஆட்சி மாறியதும் அதிரடி மாற்றம்... ஸ்டாலின் அமைத்த குழுவுக்கு விஜய் வைத்த முற்றுப்புள்ளி!

ஆட்சி மாறியதும் அதிரடி மாற்றம்... ஸ்டாலின் அமைத்த குழுவுக்கு விஜய் வைத்த முற்றுப்புள்ளி!

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய–மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது.

Author: Bhavani தமிழ்நாடு

மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது.

மேலும், அந்தக் குழுவின் அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை நவம்பர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி, 2025 ஏப்ரல் 17-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் தலையீடுகளைக் குறைத்து, மாநிலங்களின் சட்டமியற்றும், நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைப்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தது.

408 பக்க அறிக்கையில் இடம்பெற்ற முக்கியப் பரிந்துரைகள்!

இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை சுமார் 408 பக்கங்களைக் கொண்டிருந்தது. மொத்தம் 10 அத்தியாயங்களில் ஆளுநர்களின் அதிகாரங்கள், தொகுதி மறுவரையறை, மொழிக் கொள்கை, கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியப் பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், மக்களவைத் தொகுதிகளின் மாநிலவாரியான ஒதுக்கீட்டை 2126-ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தொடக்கத்தில் இரண்டு பகுதிகளாக அறிக்கை தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் தலா 10 அத்தியாயங்களைக் கொண்ட மூன்று பகுதிகளாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம், டிஜிட்டல் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் உள்ளிட்ட அம்சங்களையும் அடுத்தடுத்த அறிக்கைகளில் சேர்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் 1969-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவுக்குப் பிறகு, மத்திய–மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முக்கியமான குழுவாக குரியன் ஜோசப் குழு பார்க்கப்பட்டது.

குழுவைக் கலைக்க விஜய் அரசு கூறும் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் செயல்பாடுகளை நிறுத்த விஜய் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நவம்பர் 6-ஆம் தேதி அரசாணை எண் 704 வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அரசாணை எண் 202 மூலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட ஆணையத்துக்கு மத்திய–மாநில உறவுகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுஆய்வு செய்தல், தமிழ்நாட்டின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் மத்திய–மாநில உறவுகள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசாணைகள் தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கி வந்தது.

இந்நிலையில், உயர்நிலைக் குழுவின் பணிகளுக்கும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் கணிசமான ஒற்றுமை இருப்பதாகவும், இரு அமைப்புகளின் செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், குரியன் ஜோசப் தலைமையிலான குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவரங்களைப் பரிசீலித்த பிறகு, உயர்நிலைக் குழுவின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குரியன் ஜோசப் குழுவின் செயலாளர் மற்றும் குழு அலுவலர், அந்தக் குழுவின் அனைத்து பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களையும் உடனடியாகத் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட விவரத்தை அரசுக்கு அறிக்கையாக அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய–மாநில உறவுகள் மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கியப் பரிந்துரைகளை வழங்கிய குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து, அதன் பணிகளை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.