திருச்செந்தூர் கோவிலில் கட்டண முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அதனை நேரில் கண்டறிய அமைச்சர் ரமேஷ் சாதாரணப் பக்தரைப் போலக் கோவிலுக்குள் வந்தார். அப்போது, சில அர்ச்சகர்கள் அவரை முறைகேடான வழியில் விரைவாகத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல ரூ.4,000 கட்டணம் கேட்டுள்ளனர். உடனே அமைச்சர் தனது மொபைல் மூலம் ஜி-பே (GPay) வாயிலாக அந்த ரூ.4,000 தொகையைச் செலுத்தியுள்ளார். பணம் பரிமாற்றம் முடிந்த பின்னர், வந்தது அமைச்சர் என்பது தெரியவந்ததால் முறைகேட்டில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, கோவிலில் நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறி பக்தர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சர் தீவிர விசாரணை நடத்தினார். ஆய்வில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் கோவிலில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த திடீர் அதிரடி ஆய்வு திருச்செந்தூர் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









