தீபாவளி போனஸிலும் பாரபட்சமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெடித்த தொழிலாளர்கள் போராட்டம்!

தீபாவளி போனஸிலும் பாரபட்சமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெடித்த தொழிலாளர்கள் போராட்டம்!

தீபாவளி முன்பணம் வழங்குவதில் நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Author: Bhavani தமிழ்நாடு

கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர்கள் தங்களுக்குத் தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர் சங்கத்தினர், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், பதிவாளர் அறையை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் முன்பணமாக ரூ.15,000 வழங்க வேண்டும் என்று பதிவாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதுதொடர்பாகப் பலமுறை வலியுறுத்தியும் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்க உயர்கல்வித் துறைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், பல்கலைக்கழக நிதிக்குழுவின் ஒப்புதலைப் பெற்றுவர வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.20,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்க மறுப்பது பாகுபாடு காட்டும் செயலாகவே பார்க்கிறோம்.

தொழிலாளர்களும் தங்களது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ரூ.15,000 முன்பணம் கேட்டோம். அந்தக் கோரிக்கையைக்கூட நிறைவேற்ற முடியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

எனவே, எங்களது கோரிக்கையை உயர்கல்வித் துறையும் தமிழ்நாடு அரசும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணம் வழங்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.