பள்ளி மாணவர்கள் ரவுடிகள் போல தலைமுடி வெட்டிக்கொண்டு வருவதாகவும், சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு ஆசிரியர்களே மொட்டை அடித்து விடலாம் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமூக மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், மாணவர்களின் தோற்றம் மற்றும் ஆடைக் கட்டுப்பாடு குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், "இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதைப் பார்த்தால் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்பவர்கள் போல இல்லாமல், சிலர் ரவுடிகள் மாதிரி முடியை வெட்டுகிறார்கள். ஒழுங்காக முடி வெட்டியுள்ள மாணவர்களை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள்; அதில் தவறே கிடையாது. நம் வீட்டுப் பிள்ளையாக நினைத்துதான் இதைச் சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது.
இரண்டாவதாக, கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். பெற்றோர் ஏன் இதனை அனுமதிக்கிறீர்கள்? ஏதேனும் பிரச்னையில் சிக்கி மாணவர்கள் காவல் நிலையம் சென்றால், அங்கே அவர்களின் தோற்றத்தைப் பார்த்தவுடனேயே அவர்கள் தவறு செய்தவர்கள் என காவலர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். இதில் காவலர்களின் தவறு எதுவும் இல்லை; ஒருவரின் தோற்றம்தான் அவர்களின் குணத்தைக் காண்பிக்கிறது"என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றும், அவர்களின் தோற்றத்தை வைத்து குற்றவாளிகளாகக் கருத நேரிடும் என்றும் அமைச்சர் பேசியதற்குச் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் அமைச்சரின் பேச்சு அமைந்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
LIVE 24 X 7








