ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் முக்கிய திட்டத்தை தொடங்கி வைத்தார். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ.1,110 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது.
ஈரோடு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்
மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வரும் முதலமைச்சர் விஜய், இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பெண்கள் பூரண கும்ப மரியாதை!
கோவை விமான நிலையத்தில் இருந்து பெருந்துறைக்கு சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சரை பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
செங்கம்பள்ளி பாலத்தில் தொடங்கிய ரோடு ஷோ, பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. பள்ள கவுண்டன்பாளையம், விஜயமங்கலம், பெருந்துறை புறவழிச்சாலை, சிப்காட், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சிலை ஆகிய இடங்களில் பொதுமக்களை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
தளபதி முழக்கத்தால் அதிர்ந்த சாலைகள்!
ரோடு ஷோ நடைபெற்ற பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
வாகனத்தில் நின்றபடி பயணித்த முதலமைச்சர் விஜய், பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். அவரைக் கண்டதும் மக்கள் 'தளபதி... தளபதி...' என முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மொத்தம் 22 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோவில், பொதுமக்களின் உற்சாக வரவேற்பை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக முக்கிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பெருந்துறையில் அரசு விழா!
ரோடு ஷோவை தொடர்ந்து, பெருந்துறை பைபாஸ் சாலை காஞ்சிக்கோவில் பிரிவில் உள்ள லட்சுமி நாராயணன் மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
அங்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், விஜய் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து வழங்கி முதலமைச்சரை வரவேற்றனர்.
இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவி!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.1,110 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.
மகளிர் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்பு!
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிப்பது, சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழில் முனைவோர் திறனை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.
இந்த நிதியுதவி மூலம் புதிய தொழில்களை தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் மகளிர் குழுக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரே நிகழ்ச்சியில் ரூ.1,110 கோடி கடன் உதவி வழங்கப்பட்டிருப்பது, மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









