விளையாட்டு

மும்பை vs ஐதராபாத்: சரிவிலிருந்து மீளுமா மும்பை?- வான்கடேயில் இன்று மோதல்!

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

மும்பை vs ஐதராபாத்: சரிவிலிருந்து மீளுமா மும்பை?- வான்கடேயில் இன்று மோதல்!
MI vs SRH
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, எழுச்சி கண்டுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

சொந்த மண்ணில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஆடிய 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 9-வது இடத்தில் அந்த அணி தத்தளிக்கிறது. குறிப்பாக, கடந்த போட்டியில் சென்னைக்கு எதிராகப் படுதோல்வி அடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் ஃபார்ம் இன்றித் தவிக்கிறார். இருப்பினும், காயம் காரணமாக விலகியிருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவது மும்பை அணிக்கு வலு சேர்க்கும்.

ஐதராபாத்தின் அதிரடி வேட்டை

மறுபுறம், ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்து 4 வெற்றிகளைக் குவித்து ஐதராபாத் அணி அபாரமான ஃபார்மில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து அந்த அணி மிரள வைத்துள்ளது. அதிரடி வீரர்கள் அபிஷேக் சர்மா, கிளாசென் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரன் மழையை பொழிந்து வருகின்றனர். பந்து வீச்சிலும் இஷான் மலிங்கா, கம்மின்ஸ் ஆகியோர் பலமாக இருப்பதால், ஐதராபாத் அணியை வீழ்த்துவது மும்பைக்கு எளிதான காரியமாக இருக்காது.

வான்கடே மைதானத்தின் எதிர்பார்ப்பு

வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியிலும் அதிக ரன்களை எதிர்பார்க்கலாம். நேருக்கு நேர் மோதிய கணக்குகளில் மும்பை 15 வெற்றிகளுடன் முன்னிலை வகித்தாலும், தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் ஐதராபாத் கை ஓங்கியுள்ளது. சரிவிலிருந்து மீள மும்பையும், தனது வெற்றிப் பயணத்தைத் தொடர ஐதராபாத்தும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.