விளையாட்டு

'சச்சினிடம் ஆலோசனை கேள்... சிறுவயதை அனுபவி!' - வைபவ் சூர்யவன்ஷிக்கு டேரில் கலினன் அறிவுரை

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருக்கும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

'சச்சினிடம் ஆலோசனை கேள்... சிறுவயதை அனுபவி!' - வைபவ் சூர்யவன்ஷிக்கு டேரில் கலினன் அறிவுரை
தென்னாப்பிரிக்காவுக்காக 70 டெஸ்ட் மற்றும் 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் கலினன், கிரிக்இன்போ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

அதில், "வைபவ் சூர்யவன்ஷியிடம் இருப்பது வெறும் திறமை மட்டுமல்ல. இந்திய கிரிக்கெட், ஐபிஎல், சமூக வலைதளங்கள், வணிக உலகம் என அனைத்தும் 15 வயது சிறுவனைச் சுற்றி சுழல்கின்றன. இதுபோன்ற சூழலை இதற்கு முன்பு கிரிக்கெட் உலகம் பார்த்ததே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சமூக வலைதளங்கள் ஒரு சிறுவனுக்கும், கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளுக்கும் இடையேயான தூரத்தை இல்லாமல் செய்துவிட்டன. இந்த வயதில் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் அனைவரும் கவனித்து விமர்சிப்பார்கள். எனவே, இப்போது சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தத்தில் சிக்காமல், வீட்டில் இருந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களுடன் தெருக்களில் கிரிக்கெட் விளையாடி தனது சிறுவயது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தையும் நினைவுகூர்ந்த கலினன், "சச்சின் இளம் வயதில் இந்திய அணியில் அறிமுகமானபோது, அவரை சரியான நபர்கள் வழிநடத்தினர். ஆனால், இன்றைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. சமூக வலைதள அழுத்தம் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது" என்றார்.

இளம் வயதிலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய பல வீரர்களின் வாழ்க்கை பின்னர் திசைமாறியதையும் சுட்டிக்காட்டிய அவர், "வைபவ் சூர்யவன்ஷி தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் ஆலோசனை பெற வேண்டும். சச்சினைவிட சிறந்த வழிகாட்டி அவருக்கு கிடைக்க மாட்டார்" என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நேரத்தில் டேரில் கலினன் கூறியுள்ள இந்த அறிவுரை, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இளம் வீரர்களின் மனநலன் மற்றும் வளர்ச்சி குறித்த புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.