அரசியல்

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

குதிரைப் பேரம் வழக்கில் முன்ஜாமீன் உத்தரவைப் பெற, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
Senthil Balaji
தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைப் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொறடா உத்தரவை மீறி ஆதரவாக வாக்களிக்கும்படி ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் யூடியூப்பர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலை இருவேளையும் ஆஜராக வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த செந்தில் பாலாஜி, இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்து முன்ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். அவர் விரைவில் நீதிபதி முன்பு ஆஜராகி முன்ஜாமீன் உத்தரவைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.