அரசியல்

சட்டப்பேரவைக்கு 'நாள்' குறித்த ஆளுநர்... த.வெ.க அரசை விமர்சித்த திமுக ஐடி விங்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை முன்வைத்து, திமுக ஐடி விங் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

சட்டப்பேரவைக்கு 'நாள்' குறித்த ஆளுநர்... த.வெ.க அரசை விமர்சித்த திமுக ஐடி விங்
tvk government budget
கடந்த காலங்களில் சட்டப்பேரவையை எந்த தேதியில் கூட்ட வேண்டும் என்பதை பேரவைத் தலைவர் அறிவிப்பார். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026–27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 5ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் நாள் குறித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பது அதிகார நடைமுறையில் மாற்றத்தை காட்டுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் தொடர்பான செய்திக்குறிப்பை எடுத்துக்காட்டாக வெளியிட்டுள்ளது. அதில், "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது த.வெ.க ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன் கீழ், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 5ஆம் தேதி பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நாள் குறித்துள்ளார்கள்" என இடம்பெற்றிருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு செய்திக்குறிப்புகளையும் ஒப்பிட்டு, "கடந்த காலங்களில் பேரவையை கூட்டும் தேதியை பேரவைத் தலைவர் அறிவித்த நிலையில், தற்போது ஆளுநர் நாள் குறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றம், மாற்றம் என கூறிய த.வெ.க அரசு, இறுதியில் சட்டப்பேரவையின் உரிமைகளையே அடகு வைத்துவிட்டதா?" என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.