அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MK Stalin
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தொடர்புடைய ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பது மற்றும் அதன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் ரூ.2.27 கோடி மதிப்பில் சொத்து வாங்கியது குறித்த விவரங்களை மறைத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் திருஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது புகாரை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தலைவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வேட்புமனுவில் அறக்கட்டளை விவரங்களைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று வாதிட்டார்.

தொடர்ந்து, மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களுக்கான ஆதாரங்கள் குறித்து மனுதாரர் வழக்கறிஞர் எம்.எல்.ரவியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றுகள் தமிழில் இருந்ததால், அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.