இந்தியா

Work From Home: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லியில் வாரம் 2 நாட்கள் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையில் அரசு ஊழியர்களுக்கு பணியாற்ற அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Work From Home: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Delhi
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லி மாநில அரசு இன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து ஊக்குவிக்கப்பட உள்ளது.

பணி நேர மாற்றம் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள்

புதிய உத்தரவின்படி, டெல்லி அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தே வேலை (Work from Home) செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் 50 சதவீதக் கூட்டங்கள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி அலுவலகங்களின் பணி நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள்

அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல் ஒதுக்கீடு 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது (200 லிட்டரில் இருந்து 160 லிட்டராகக் குறைப்பு). அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிய வாகனங்கள் எதுவும் வாங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஏதுவாக, 29 அரசு குடியிருப்புகளில் இருந்து 58 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வாரத்தில் ஒருநாள் 'மெட்ரோ தினம்' மற்றும் 'கார்கள் இல்லாத நாள்' (No Car Day) கடைப்பிடிக்கவும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்துத் தனிப் பிரச்சாரத்தையும் டெல்லி அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.