இந்தியா

டாடா சன்ஸ் குழும தலைவர் திடீர் ராஜினாமா.. பங்குகள் கடும் சரிவு!

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் விலகிய நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.

டாடா சன்ஸ் குழும தலைவர் திடீர் ராஜினாமா.. பங்குகள் கடும் சரிவு!
Tata group stocks fall
டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன், தற்போதைய பதவிக்காலம் வரும் 2027 பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் அப்பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என அறிவித்துள்ளார். இச்செய்தியைத் தொடர்ந்து டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகக் குழு, சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகப் பரிந்துரைத்தன. இருப்பினும், கடந்த பிப்ரவரி 24 அன்று நடந்த கூட்டத்தில் ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால், ஒருமனதான முடிவு எட்டப்படவில்லை.

டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, சந்திரசேகரன் தொடர்வதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு கிடைக்காததால், குழுமத்தின் எதிர்காலத்தையும் திட்டங்களையும் கருத்தில் கொண்டு, பதவிக்காலம் முடிந்ததும் விலகுவதாகச் சந்திரசேகரன் முறைப்படித் தெரிவித்துள்ளார். புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திரசேகரனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டடன. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்கு விலை 5.70% வரை சரிந்தது.

மேலும் டாடா மோட்டார்ஸ் (4.11%), டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (2.85%), டாடா எல்க்ஸி, டாடா ஸ்டீல், டைட்டன், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் உள்ளிட்ட அனைத்து டாடா குழுமப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

கடந்த 2017-இல் டாடா குடும்பத்தைச் சேராத முதல் தொழில்முறை தலைவராகப் பொறுப்பேற்ற சந்திரசேகரன், 10 ஆண்டுகாலத்தில் டாடா குழுமத்தை வலிமையாக வழிநடத்தினார். விமானத் துறை, அரைகடத்தி (Semiconductor), பேட்டரி தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் குழுமத்தை விரிவுபடுத்தினார்.

இவரது தலைமையில் டாடா குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.7.89 லட்சம் கோடியிலிருந்து ரூ.16.24 லட்சம் கோடியாக உயர்ந்ததுடன், நிகர லாபமும் 5 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்தது. குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பும் கணிசமாக உயர்ந்து சாதனை படைத்த நிலையில், இவரது விலகல் குழுமத்தின் எதிர்கால முதலீடுகளுக்கு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.