இந்தியா

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!
Puducherry
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அதே பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

வழக்கின் பின்னணியும் விசாரணையும்

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கருணாஸ் (18) மற்றும் விவேகானந்தன் (56) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இதில் விவேகானந்தன் கடந்த செப்டம்பர் மாதம் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். கருணாஸ் மீதான வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை விசாரித்த நீதிபதி சுமதி, கடந்த 30-ஆம் தேதி கருணாஸைக் குற்றவாளி என அறிவித்தார். இன்று காலை வெளியான இறுதித் தீர்ப்பில், குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் நீதியை நிலைநாட்டியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.