இந்தியா – வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் ஒருவரை, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BGB) வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் தடுப்பு வேலி இல்லாததால் தவறுதலாக வங்கதேசப் பகுதிக்குள் வந்துவிட்டதாக இந்திய வீரர் விளக்கம் அளித்ததாகக் கூறப்படும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் அவரை பைக்கில் ஏற்றிச் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
எல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
இந்தியா – வங்கதேசம் இடையிலான எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேகாலயா மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய BSF வீரர் ஒருவர், எல்லையைக் கடந்து வங்கதேசப் பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு வந்த வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்த இந்திய வீரரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, தான் வேண்டுமென்றே எல்லையைக் கடக்கவில்லை என்றும், அந்தப் பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் எல்லையை அடையாளம் காண முடியாமல் தவறுதலாக வந்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்திய வீரரின் விளக்கத்தை ஏற்க மறுத்த வங்கதேச வீரர்கள், அவரைத் தொடர்ந்து தங்களுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் அவரை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆயுதங்களுடன் இருந்த இந்திய வீரர்!
வெளியாகியுள்ள வீடியோவில், இந்திய BSF வீரரிடம் வாக்கி டாக்கி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களும், INSAS துப்பாக்கி மற்றும் பம்ப் ஆக்ஷன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், வங்கதேச வீரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்திய வீரர் எல்லையைத் தவறுதலாகக் கடந்துவிட்டதாக விளக்கம் அளித்தும், அவரை வங்கதேச வீரர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
வேலி இல்லாத எல்லைப் பகுதியே காரணமா?
இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பகுதி மேகாலயா மாநிலத்தின் ஜோவை (Jowai) பகுதியை ஒட்டிய இந்திய – வங்கதேச எல்லைப் பகுதியாகும். இந்தப் பகுதிக்கு எதிரே வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் உள்ள பிச்சினகண்டி அமைந்துள்ளது.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே சுமார் 4,096 கிலோமீட்டர் நீளத்திற்கு சர்வதேச எல்லை உள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா, அசாம், மேகாலயா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் நில அமைப்பு மற்றும் இதர காரணங்களால் வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் 443 கிலோமீட்டர் எல்லையில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலிகள் அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சில பகுதிகளில் சர்வதேச எல்லையைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் இந்திய வீரர் தவறுதலாக எல்லையைக் கடந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிப்பு!
இந்திய வீரரை வங்கதேச வீரர்கள் அழைத்துச் சென்ற சம்பவம் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீரரைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பிடித்துச் செல்லப்பட்ட இந்திய BSF வீரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதிகரிக்கும் எல்லைப் பதற்றம்!
வங்கதேசத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோத ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்கள் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய வீரரையே வங்கதேச வீரர்கள் பிடித்துச் சென்ற சம்பவம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தடுப்பு வேலி இல்லாத எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு தெளிவான எல்லை அடையாளங்கள் அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தவறுதலாக எல்லையைக் கடந்ததாகக் கூறப்படும் இந்திய வீரரை வங்கதேச வீரர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது. எல்லையில் வேலி இல்லாதது ஒரு புறம் இருக்க, அண்டை நாடுகளின் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நிலவும் இந்த மோதல் போக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









