மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீண்டும் அதிரடியாக பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே மேகதாது திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்ததுடன், மத்திய அரசு இறுதி அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த பேச்சு தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி விவகாரத்தை மீண்டும் அரசியல் ரீதியாக சூடுபிடிக்கச் செய்துள்ளது.**
பிரதமர் முன்னிலையில் மேகதாது திட்டம் குறித்து கோரிக்கை!
கர்நாடக மாநிலத்தில் ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா சென்றார். மைசூரில் நடைபெற்ற காஸ்மோஸ் வான்நோக்கி அரங்க திறப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்து கொண்டார்.
அப்போது பிரதமர் முன்னிலையில் பேசிய டி.கே. சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இறுதி அனுமதி வழங்க வேண்டும் என்றும் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
‘மேகதாது திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது!’
நிகழ்ச்சியில் பேசிய டி.கே. சிவக்குமார், காவிரி ஆற்றின் அணையை பிரதமர் பார்வையிட்டதை குறிப்பிட்டு, மேகதாது திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேகதாது திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் சட்டரீதியாக மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வனத்துறை அனுமதி தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், திட்டத்திற்கு தேவையான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேகதாது அணை ஒரு முக்கியமான சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கமாக இருக்கும் என்றும், இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் பிரதமரின் நிர்வாகம் கர்நாடகாவுக்கு உதவும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு எதிர்ப்பு... கர்நாடகா விடாப்பிடி!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி நீர்வரத்து பாதிக்கப்படும் என்றும், தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தமிழக தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு தமிழ்நாடு தரப்பில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
‘மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் என சொல்வது நடக்காது!’ – தமிழ்நாடு அமைச்சர் பதிலடி
கர்நாடக முதலமைச்சரின் மேகதாது அணை குறித்த கருத்துக்கு நேற்று பதிலளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், மேகதாது அணையை கட்டியே தீருவேன் என டி.கே. சிவக்குமார் கூறுவது ஒருபோதும் நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரின் எதிர்ப்புக்கு மறுநாளே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மீண்டும் மேகதாது அணை குறித்து டி.கே. சிவக்குமார் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் முன்னிலையிலேயே உறுதி... தமிழகத்தில் அதிருப்தி!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் முன்னிலையிலேயே கர்நாடக முதலமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
ஒருபுறம் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் கர்நாடகா அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது.
இதனால் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் மீண்டும் இரு மாநிலங்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா? தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கர்நாடகாவின் திட்டம் முன்னேறுமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
LIVE 24 X 7









