மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில், இனிப்பு வகையான ரசகுல்லா என்று கூறி வழங்கப்பட்ட நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர், அது வாய்க்குள்ளேயே வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டோரி மாவட்டம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரோட்டியா. கடந்த 10 ஆம் தேதி இரவு இவர் தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது, ராம் பகத் பரோட்டியா என்பவர் அங்கு வந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ராம் பகத் தன்னிடமிருந்த நாட்டு வெடிகுண்டை ரசகுல்லா என்று கூறி ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு இருட்டாக இருந்ததால், தன் கையில் கொடுக்கப்பட்டது இனிப்பா அல்லது வெடிகுண்டா என்பதை ராஜேந்திரனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அதனை ரசகுல்லா என்று நம்பி வாயில் போட்டுக் கடித்த அடுத்த நொடியே, அந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடிச்சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரனின் மனைவி சுசிலா பாய் மற்றும் அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வனவிலங்குகளைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டே இந்த விபரீதத்திற்குக் காரணம் என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் துர்கா பிரசாத் நாக்புரே தலைமையிலான போலீசார், ராம் பகத்தைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் ஒருவன் தனக்கு அந்த வெடிகுண்டைக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும், உயிரிழந்தவரின் அக்கம்பக்கத்தினருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









