இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த போராட்டம்...களத்தில் குதித்த இந்திய கூட்டணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த போராட்டம்...களத்தில் குதித்த இந்திய கூட்டணி!
india alliance protest

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று (அக்.6) டெல்லியில் பேரணி நடத்தினர். தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி சென்ற பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் திரண்டனர். அங்கிருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதனை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

பேரணி தேர்தல் ஆணைய அலுவலகத்தை நெருங்கிய நிலையில், போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

இந்தியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகம் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி போலீசார் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் என சுமார் 4,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற சாலை, படேல் சவுக் உள்ளிட்ட மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.