இந்தியா

பஞ்சாயத்து ஓவர்.. கேரள முதல்வரை அறிவித்தது காங்கிரஸ் தலைமை!

கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பஞ்சாயத்து ஓவர்.. கேரள முதல்வரை அறிவித்தது காங்கிரஸ் தலைமை!
கேரளச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் நீடித்த அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் கட்சியின் மூத்த தலைவர்களிடையே நிலவிய கடும் போட்டியால் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி மேலிடம் நடத்திய நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்ற வி.டி. சதீசன் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் பதவிக்கான ரேசில் கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா மற்றும் வி.டி. சதீசன் ஆகிய மூன்று முக்கியத் தலைவர்கள் இருந்தனர். இதில் வேணுகோபாலை முதலமைச்சராக்கி விட்டு, சதீசனுக்கு முக்கியத் துறையை ஒதுக்கக் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது. ரமேஷ் சென்னிதலாவுக்குச் சபாநாயகர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சியான ஐயுஎம்எல் (IUML) சதீசனுக்குப் பச்சைக்கொடி காட்டியதுடன், அவரும் முதலமைச்சர் பதவியில் உறுதியாக இருந்ததால் கட்சி மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சதீசனின் பிடிவாதம் மற்றும் கேரள காங்கிரசின் பெரும்பான்மை நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, இன்று காங்கிரஸ் தலைமை அவரது பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் கேரளாவில் 11 நாட்களாக நிலவி வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.