உலகம்

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!
IND & US
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகச்சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.

நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி

அமெரிக்கா அளித்துள்ள இந்த விலக்கில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் சரக்குகள் (Cargo), அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு முன்னரே கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பால் மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியாமல் கடலில் தேங்கியிருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளை மட்டுமே இந்தியா தற்போது வாங்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னணியும் வரி விதிப்பு விவகாரமும்

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தியாவுக்கான வர்த்தக வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்திருந்தது. ஒருவேளை இந்தியா மறைமுகமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால், மீண்டும் 25 சதவீதக் கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரித்திருந்தது. தற்போது நிலவும் போர் நெருக்கடியால் இந்த விதிகளில் தற்காலிகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நிலைப்பாடு

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெயைத் தடையின்றி விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உறுதி அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த 30 நாள் விலக்கு இந்தியாவிற்கு ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.