உலகம்

இந்தியா - பாகிஸ்தான் போரை வரியை வைத்து நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை வரியை வைத்து நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு!
Donald Trump
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூழும் நிலையில், இரு நாடுகளுக்கும் 350% வரி விதிப்பேன் என்று மிரட்டித் தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், தான் மோதல்களைத் தீர்ப்பதில் நிபுணர் என்று கூறி, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசினார்.

காஷ்மீரின் பஹ்லகாமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாகக் கூறி, இந்திய இராணுவம் மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன. நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது எனச் சொன்னேன்" என்று டிரம்ப் கூறினார்.

'எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை'

தொடர்ந்து பேசிய டிரம்ப், "நீங்கள் ஒருவருக்கொருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் சொன்னேன்" என்று குறிப்பிட்டார். மேலும், "350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால், நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் நிலைப்பாடு

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தைத் தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். டிரம்ப் போரை நிறுத்தியதாகக் கூறிய கருத்தைப் பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில், இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.