விளையாட்டு

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!
IPL Mini Auction
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களைக் கடும் போட்டிக்குப் பிறகு தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

அன்கேப்டு வீரர்கள் தேர்வு

அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இடம்பெற்றிருந்த இந்திய இளம் உள்ளூர் ஆல் ரவுண்டரான பிரஷாந்த் வீரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், பிரஷாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர் (இந்திய தேசிய அணிக்கு விளையாடாதவர்) என்ற சாதனையை அவர் படைத்தார்.

அதேபோல், அன்கேப்டு விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 19 வயதே ஆன கார்த்திக் சர்மாவை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில், இவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியது. இதன் மூலம், அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர் என்ற பிரஷாந்த் வீரின் சாதனையை கார்த்திக் சர்மா சமன் செய்துள்ளார். இந்த இரண்டு வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஏலத்தில்தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத்தின் பொதுவான விவரங்கள்

ஏலப்பட்டியலில் முதலில் 240 இந்தியர் மற்றும் 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். இந்த மினி ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தி வருகிறார்.