அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!
TVK Vijay
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க 10 பேர் கொண்ட 'தேர்தல் பிரசாரக் குழுவை' அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

1. என்.ஆனந்த்

2. ஆதவ் அர்ஜுனா

3. கே.ஏ.செங்கோட்டையன்

4. ஏ.பார்த்திபன்

5. பி.ராஜ்குமார்

6. கே.வி.விஜய் தாமு

7. எஸ்.பி.செல்வம்

8. கே.பிச்சைரத்தினம் கரிகாலன்

9. எம்.செரவு மைதின் (எ) நியாஸ்

10. ஜே.கேத்ரின் பாண்டியன்

234 தொகுதிகளிலும் அதிரடி பிரசாரம்

இந்தக் குழுவானது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது தொடர்பான பணிகளை முழுமையாகக் கவனிக்கும். இக்குழுவிற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விஜய் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செங்கோட்டையனுக்கு இடம்

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில்' மூத்த அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 'தேர்தல் பிரசாரக் குழுவில்' அவருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.