அரசியல்

எம்எல்சி கொண்டுவரப்போறோம்.. ப.சிதம்பரத்திடம் ரகசியம் சொல்லி அனுப்பிய ஸ்டாலின்!

தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எம்எல்சி கொண்டுவரப்போறோம்.. ப.சிதம்பரத்திடம் ரகசியம் சொல்லி அனுப்பிய ஸ்டாலின்!
DMK & Congress
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது டெல்லி மேலிடத்திற்குப் போதிய நம்பிக்கை இல்லாத சூழல் நிலவி வருகிறது. அவர் திமுகவின் 'ஸ்லீப்பர் செல்' போலச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், சோனியா காந்தியின் நேரடித் தூதுவராக மூத்த தலைவர் ப. சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் 30 தொகுதிகளைக் காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், 25 இடங்களுக்கு மேல் தர முடியாது என்ற திமுகவின் பிடிவாதத்தால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்க இன்று ஆலோசனைகள் நடைபெற்றன.

சோனியாவுடன் போனில் பேசிய ஸ்டாலின்

முதலமைச்சர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ராகுல் காந்தியுடன் பேசுமாறு ப. சிதம்பரம் விடுத்த வேண்டுகோளை ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சோனியா காந்தியைத் தொடர்பு கொண்ட ப. சிதம்பரம், ஸ்டாலினிடம் போனை வழங்கியுள்ளார். அப்போது ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து கேட்டறிந்த பின்னர் சோனியா காந்தி, தொகுதிப் பங்கீடு குறித்துச் சிதம்பரத்திடமே பேசி முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் சுருக்கமாகப் பேசிவிட்டு போனை செல்வப்பெருந்தகையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில், ப சிதம்பரத்துடன் பேசிய பிறகு 28 தொகுதிகள் கொடுக்க ஸ்டாலின் முன்வந்ததாகவும் ஆனால், காங்கிரஸ் 32 தொகுதி வேண்டும் என விடாப்பிடியாக நிற்கிறதாம்.

எம்.எல்.சி. என்னும் புதிய துருப்புச் சீட்டு

பேச்சுவார்த்தையின் இறுதியில், ஒரு முக்கிய தகவலை ப. சிதம்பரத்திடம் ஸ்டாலின் ரகசியமாகத் தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் சட்டமன்ற மேலவையை (MLC) மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அப்படி மேலவை அமையும் பட்சத்தில் காங்கிரஸிற்கு 10 சதவீத இடங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். சட்டமன்றத் தொகுதிகளைக் குறைத்துக் கொள்வதற்குப் பதிலாக, மேலவை இடங்களை ஒரு சமரசத் திட்டமாக முன்வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவு எடுக்குமா காங்கிரஸ் மேலிடம்?

ஸ்டாலினுடன் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்களை ப. சிதம்பரம் உடனடியாக சோனியா காந்திக்குத் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், திமுக வழங்கியுள்ள ராஜ்யசபா சீட்டுக்கான வேட்பாளரை இன்றிரவே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.