சினிமா

பொங்கல் ரேஸில் இணைந்த 'ஜீவா'.. ஜன.15 வெளியாகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!

நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கல் ரேஸில் இணைந்த 'ஜீவா'.. ஜன.15 வெளியாகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!
TTT Release
நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தலைவர் தம்பி தலைமையில் - படக்குழு விவரம்

மலையாளத்தில் 'Falimy' திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்ற நிதிஷ் சகாதேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராவண கோட்டம் திரைப்படத்தைத் தயாரித்த கண்ணன் ரவி, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் வருகிற ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக வெளியாகும் ஜீவா படம்

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் நேற்று (ஜனவரி 9) வெளியாகாத நிலையில், இது தொடர்பான வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்தப் பின்னணியில், பொங்கல் விடுமுறை வசூலை மனதில் கொண்டு, 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதன் படக்குழுவினர் மாற்றியமைத்து, வருகிற ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனால், விஜய்யின் படம் வெளியாகாத நிலையில், ஜீவாவின் நகைச்சுவைப் படம் ரசிகர்களுக்குப் பொங்கல் பொழுதுபோக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் திரௌபதி 2, மற்றும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' ஆகிய திரைப்படங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.