சினிமா

"பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாப்பாடு போடாமல் மன உளைச்சல்"- பகீர் கிளப்பும் நடிகையின் பேட்டி!

'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, நான்கு நாட்களிலேயே வெளியேறிய நந்தினி, நிகழ்ச்சி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.


Big Boss Nandhini
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, வெறும் நான்கு நாட்களிலேயே வெளியேறிய நந்தினி, நிகழ்ச்சி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவே கிடையாது என்றும், மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் கூறி, அவர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"ரியாலிட்டி இல்லை; மன உளைச்சல் ஏற்பட்டது"

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நந்தினி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறான முடிவு என்று வேதனை தெரிவித்தார். நிகழ்ச்சியில் 'ரியாலிட்டி' சுத்தமாக இல்லை என்றும், 24 மணி நேரமும் நடப்பவை காட்டப்படாமல் அனைத்தும் கட் செய்யப்பட்டுதான் வெளியிடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், போட்டியாளர்களை சாப்பாடு கூடப் போடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், இது மனித உரிமை மீறல் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட பாதிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை

பிக்பாஸ் ஷோவால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி, 'பைத்தியக்காரி' என பட்டம் சுமத்தப்பட்டதாகவும், இதனால் தனது பணி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் நந்தினி கண்ணீருடன் கூறினார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தனக்கு எந்தவிதமான மருத்துவ உதவியோ அல்லது பொருளாதார ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தனக்கு நடந்த அநீதிக்கு விளக்கம் கேட்டு தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் பதில் வரவில்லை என்றும், எனவே அடுத்தகட்டமாகச் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி மீது குற்றச்சாட்டு

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய்சேதுபதி குறித்தும் நந்தினி நேரடியாகக் கருத்துத் தெரிவித்தார். "விஜய்சேதுபதி போட்டியாளரை ஒரு போட்டியாளராகவே பார்ப்பதில்லை. அவர் ஒரு விஷயத்தைச் சொல்ல வரும்போது அவமதிப்பு செய்கிறார்" என்று நந்தினி குற்றம் சாட்டினார். மேலும், "கமல்ஹாசன் இருந்த வரைக்கும் நல்லப்படியாக இருந்தது, விஜய்சேதுபதி வந்த பிறகு நல்லமுறையாக இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.