உலகம்

”ஒப்பந்தம் பிடிக்கவில்லையென்றால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவேன்” – டொனால்ட் டிரம்ப்

”ஒப்பந்தம் பிடிக்கவில்லையென்றால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவேன்” – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டியிருந்த நிலையில், லெபனான் உட்பட அனைத்து பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்து இருந்தனர்.

இந்த ஒப்பந்தம் வருகின்ற 19-ந்தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வந்த மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்னும் இரண்டே நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தமக்கு திருப்தி அளிக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையேயான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இது இறுதி ஒப்பந்தம் அல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. அதன் ஷரத்துகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். குண்டுகளை வீசுவோம். ஒப்பந்தப்படி சரியாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்தம் எனக்கு ஏற்றதாக இல்லை என்றாலோ, மீண்டும் தாக்குதல்களை தொடங்குவோம்” என்று கூறினார். இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.