உலகம்

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!
பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வரலாறு காணாத இந்த வெப்பத்தால் பிரான்சில் கடந்த, 5 நாட்களில், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கிழக்கு பிரான்சின் கார்பென்ட்ராஸ் பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில், விளையாடி கொண்டியிருந்த இரண்டு குழந்தைகள் வெப்பம் தாங்க முடியாமல் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். போர்டோ மாகாணத்தில் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 80 முதல் 95 வயதுக்குட்பட்ட மூன்று முதியோர் உயிரிழந்தனர்.

வெப்பத்தின் கொடுமை தாங்காமல் ஏரி, குளங்களில் குளிக்கச் சென்றவர்களில் மட்டும், 13 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். பிரான்சின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், புகழ்பெற்ற போர்டோ நகரில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்ஷியசாக பதிவாகி, கடந்த ஆகஸ்ட் மாத சாதனையை முறியடித்துள்ளது. அங்கு கடந்த 79 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

இத்தாலியிலும் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாட்டின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ரோம் உட்பட 12 முக்கிய நகரங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வானிலை மையம், அடுத்த 4 நாட்களுக்கு வெயில் 39 டிகிரி செல்ஷியசைத் தாண்டும் என எச்சரித்துள்ளது. இது 1957 மற்றும் 1976-ல் பதிவான ஜூன் மாத சாதனையான 35.6 டிகிரி செல்ஷியசை விட மிக அதிகமாகும்.