ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி பொறுத்தப்பட்ட 'எம்.டி ஆன் பீஸ்' (MT On Peace) என்ற வர்த்தகக் கப்பல் மீது இன்று ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர். அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெறும் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், வர்த்தக கப்பல் மீதமான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற 'எம்.டி ஆன் பீஸ்' வர்த்தகக் கப்பல் மீது அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் மொத்தம் 19 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். அதில் 17 பேர் இந்திய நாட்டவர்கள் ஆவர்.
இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 12 ஊழியர்கள் காயமடைந்தனர். இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த மாலுமிகள், ஓமன் நாட்டின் கடற்படை மற்றும் அதிகாரிகளின் உதவியோடு உடனடியாக மீட்கப்பட்டனர். காயமடைந்த மாலுமிகள் அனைவரும் ஓமனில் உள்ள ‘கசாப்’ (Khasab) பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டான நேரத்தில் விரைந்து செயல்பட்டு உதவி வழங்கிய ஓமன் அரசுக்கு இந்திய அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகக் கப்பல் மீதான இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் இந்தியாவிற்குப் பெரும் கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல்வழிப் பாதையில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்ப வேண்டும் என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள், மாலுமிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தும் வர்த்தகமும் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
LIVE 24 X 7









